அனுபவம் புதுமை
“அனுபவங்கள் நம்மை முழுமை பெறச் செய்கிறது ” என்று எங்கோ நான் படித்தது நினைவுக்கு வந்தது.
வாழ்வில் அனுபவம் , “கலைந்து செல்லும் மேகங்களின் ஊடே பயணிப்பது போன்ற ஒரு நிகழ்வு”. நம்மில் பலர் அதனை மழை மேகமாய் மாற்றி பயன் பெறுவதும் உண்டு.
இப்போதெல்லாம் எனக்கு ஞாபக சக்தி அதிகமானது போன்ற உணர்வு. அதிகம் சம்பவங்கள் மறப்பதில்லை. அதுவே பிளஸ் அதுவே மைனஸ்.சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாண அனுபவம் கீழே உங்கள் பார்வைக்கு.
நாள் : 15 .5.2011
இடம் : திருநாகேஸ்வரம் – இராகு பெயர்ச்சி விழா
இன்றைய தினம் திருநாகேஸ்வரம் செல்ல வேண்டுமென்பது என் அம்மா அப்பாவின் விருப்பம். வேண்டுதல் என வைத்துக் கொள்ளலாம். சில தினங்கள் முன் ஒரு விபத்தில் சிக்கி ஆபத்தின்றி மீண்டது, அவர்கள் மனதில் இந்த விருப்பத்தை தூண்டியது என கொள்ளலாம். மிகுதியாக, எனக்கு ராகுவின் பார்வையால் உள்ள சிக்கலே அந்த விபத்திற்கு காரணம் என்பது அவர்களின் எண்ணம்.
எது எப்படியோ, அவர்களின் விருப்பத்திற்கிணங்க பயணம் தொடர்ந்தோம் நாகநாதஸ்வாமி கோவில் நோக்கி. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பூஜை காலம் என்பதால், பகல் 11 மணிக்கு திருச்சியிலிருந்து கும்பகோணம் பயணமானோம். திருநாகேஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராகுஸ்தலம். தற்சமயம் ராகுப்பெயற்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மனிதனுக்குத் தான் எவ்வளவு சங்கடங்கள், துயரங்கள். ஏதாவது பரிகாரம் செய்தால் பயன் கிட்டுமோ என்று எல்லோர் முகத்திலும் தெரிந்த ஆவல், அவர்களது துயரங்களை பிரதிபலித்தது.
பொதுவாக நான் கோவிலுக்குச் செல்கையில் எல்லா நேரங்களிலும் மனதை ஒருநிலைப்படுத்தி வைத்திருப்பதில்லை. அமைதியான சூழலை பெரிதும் விரும்புபவன் நான். நமக்கு மீறிய சக்தி ஒன்று “கடவுள்” எனப்படுவதாக நம்புகின்றேன். அந்த சக்தியானது ஏதேனும் ஒரு விஷேச தினத்தின் போது தான் மனிதனுக்கு சகல சம்பத்துகளையும், குறை நிவர்திகளையும் புரியும் என்பதில் உடன்பாடில்லை. எல்லா நாளும், எல்லா பொழுதும் அந்த சக்திக்கு உகந்ததே. எனினும் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்கி, இந்தப் பெயர்ச்சி தினப் பெருங்கடலில் நானும் சிக்கிக் கொண்டேன்.
நான் சமீப காலமாக கடவுளிடம் அதிகம் வேண்டுவது இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கென்று தனியாக, சிறப்பாக வேண்டி பல காலம் ஆயிற்று என்று நினைவு. பக்குவமடைந்த நான் (அப்படிதான் நினைச்சிட்டு இருக்கேன்), இப்போதெல்லாம் கீழுள்ளவாரே வேண்டிக்கொள்வதுண்டு (நீங்களும் try பண்ணலாம்)
“இறைவா, விரும்பியதைத் தந்து ஆசிர்வதித்தால் பெருமகிழ்ச்சி – பேரின்பம் – மிக்க நன்றி. அப்படி இல்லாமல் விரும்பாத ஒன்று நிகழுமாயின், அதனை தாங்கிக் கொள்ள சக்தி கொடு. எதிர்கொள்ள தைரியம் கொடு. அதனை வெற்றியாய் மாற்றிட வலிமை கொடு….!”
Baba ஸ்டைல் வேண்டுதல் தான். ஆனாலும் நிதர்சனமான உண்மை இது தான். எல்லார்க்கும் நினைப்பது நடப்பதில்லை. அந்த வலியை வலிமை கொண்டு வென்றிட இந்த வேண்டுதல்.
ஒருவழியாய் அம்மா அப்பாவின் பாலபிஷேக வழிபாடு, விருப்பம் யாவும் நிறைவேற்றி ஊர் திரும்பிட முனைந்தோம். மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம். சிறிது நேர போராட்டத்தின் முடிவில் திருச்சி செல்லும் பேருந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து பிரயானிக்கலாணோம். இந்த பிரயாணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வினை உள்ளடக்கியது எனலாம். அந்த நிகழ்வு, இதோ கீழே…
“நான் மனதில் ஏதேதோ நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை யோசித்துக் கொண்டிருந்தேன் எனலாம். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், முந்தய காலங்களில் நிகழ்ந்த மனவருத்தங்கள், நேற்று நிகழ்ந்த சம்பவம், இவற்றிலிருந்து நான் விடுபட எடுத்த முயற்சிகள் என வந்து வந்து போயின. எல்லோர் மனதிலும் எழுவது போல், இந்த flashback ஏதோ உலகில் நான் மட்டுமே துன்பக்கடலில் உழன்றவனாய் நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.
ஏதோ ஒரு நிறுத்தத்தில், ஒரு முதியவரும் ஒரு சிறுவனும் ஏறினர். அந்தச் சிறுவன், நேராக என்னருகே வந்து நின்று கொண்டான். என்னை மாதிரி (!!!) அவனும் அழகாகவே இருந்தான். பேருந்து போகும் வேகத்தில் அவன் அல்லாடுவதைக் காணச் சகியாத என் அம்மா, அவனை என் மடியில் அமர்த்துமாறு கூறவே, நானும் மடியமர்த்திக்கொண்டேன். சிறுவன் சுமார் 6 வயதைத் தொட்டவன். சிறிது நேரத்தில் என் பக்கத்து இருக்கை காலியாகவே, என் அம்மாவும் என்னருகே வந்தமர்ந்தார்.
அந்தச் சிறுவனிடம் இயல்பாகப் பேசி வரவே, அவனும் எங்களிடத்தில் நன்றாக ஒட்டிக் கொண்டான். சிறுவன் நிஜத்தில் கொள்ளை அழகு. மழழை மொழி. தாராளமாகப் பேசி வந்தான். அவன் தாத்தாவைப் பற்றி, அவன் ஆயாவைப் பற்றி (ஆயா என்பது கிராமங்களில் பாட்டி என்னும் பொருள் குறித்தது…). அவன் அண்ணனைப் பற்றி, நேற்று கண்ட வேட்டைக்காரன் சினிமா பற்றி என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
இவ்வளவும் சொல்கிறாயே, உன் வீட்டார் என்ன செய்கிறார்கள் என என் அம்மா கேக்க, அவனும் “என் தாத்தா கிராமத்தில இருக்கு, ஆயவும் கிராமத்துல இருக்கு, அம்மா வீட்ல இருக்கு, பிரியா அக்கா ஸ்கூல் போயிருக்கா, அண்ணனும் ஸ்கூல் போயிருக்கான், அண்ணனோட அப்பா லாரி ஓட்டுறார்…” என பேசிக்கொண்டே சென்றான். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “அண்ணனின் அப்பா என்றால்…? ” ஒருவேளை தனது பெரியப்பாவைப் பற்றி சொல்கிறான் என்றெண்ணி “உன் அப்பா என்ன செய்கிறார் என்று என் அம்மா கேட்டு வைத்தார்.
அவன் கூறிய பதிலின் ஆழம் உணராது அந்த சிறுவன், ” என் அப்பா தான் ஓடி போயிட்டாரே…” என்று சொல்ல நாங்கள் சற்றே ஆடிப் போனோம். மேற்கொண்டு கேட்க கேள்வி ஏதும் வரவில்லை எங்களுக்கு. இவையாவும் புரியாது, அந்த சிறுவன் தானாக மழழை குணம் மாறது அடுக்கடுக்காய் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டோம். என் அம்மா கண்கள் கலங்கி இருப்பதை நான் உணர்ந்தேன். இந்த வயதில் அவன் தாயிருக்கும் நிலையை அவனால் உணர்ந்திருக்க முடியவில்லை, தந்தை இல்லாது எதிர்கொள்ள இருக்கும் துன்பங்களும் அவன் அறிந்திருக்கவில்லை. நினைக்கும் போதே நெஞ்சம் பாரமானது தெளிவாகப் புரிந்தது. நம் எல்லோரும், சிறு துயரம் என்றாலும் வாழ்வே முடிந்துவிட்டதாக அல்லல் படுகின்றோம். இந்த சிறுவனால் அப்படி எதுவும் நினைக்க இயலாது. அவன் முன்னே நானும், என் துயரங்களும் தூசாகத் தெரிந்தோம். கண்முன்னே தோன்றி மறைந்தன சம்பவங்கள். ஆச்சர்யமாய் இருந்தது, என் கண்களின் ஓரத்திலும் ஈரம். அந்தச் சிறுவன் நலமோடு இருக்க நிஜமாய் பிரார்த்தித்துக் கொண்டேன், மனதில்.
இந்த நிமிடமும் கடந்து போகும்…நம் வாழ்வின் பிரயாணம் தொடரும். இதுதான் ஒருவேளை நாகநாதஸ்வாமி எனக்களித்த அருட்பாடமோ என கேட்டுக்கொண்டேன் மனதில்.
அனுபவம் புதுமை….!!!
Visu…


எல்லோர்க்கும் பிரட்சினைகள் இருக்கிறது அதை அணுகும் முறையில் தான் வித்யாசங்கள் இருக்கிறது. கடவுள் நேரில் அவதரித்து பாடம் புகட்டுவதில்லை. நமக்கான பாடங்களும் புரிதல்களும் நம்மை சுற்றியே இருகின்றன. சிறுவனின் சிறுபிள்ளைத்தனம் விளக்கிய உண்மையை வேறு எந்த கடவுளாலும் நேரில் வந்து விளக்க முடியாது. நம்மை சுற்றி நடக்கும் மென்மையான விஷயங்களை பார்ப்பதன் மூலமே வாழ்கையின் எதார்த்தங்களை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
really touching one..
yeah…it is…Thanks